
டி20 உலகக்கோப்பை தொடரின் எட்டாவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதன் சூப்பர் 12 சுற்றின் முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணி, ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
அதில் வெல்வதற்காக இப்போட்டி நடைபெறும் அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். முன்னதாக இந்த தொடரில் இந்தியாவின் வெற்றி நடைக்கு பேட்டிங் துறையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிரடியாக ரன்களைக் குவித்து கருப்பு குதிரைகளாக செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக பெரும்பாலும் சூழ்நிலை எதுவாக இருந்தாலும், எதிரணி பவுலர்கள் எப்படி பந்து வீசினாலும் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடி சரவெடியாக மைதானத்தின் நாலாபுறங்களிலும் சுழன்றடிக்கும் சூரியகுமார் யாதவ் மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை விளாசி வருகிறார்.
அதிலும் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்பே அணிகளுக்கு எதிரான போட்டியில் விராட் கோலியே தடுமாறிய நிலையில் அவர் மட்டும் வேறு ஏதோ பேட்டிங்க்கு சாதகமான பிட்ச்சில் விளையாடுவது போல் அபாரமாக செயல்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மேலும் இந்த வருடம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1000* ரன்களை குவித்த முதல் பேட்ஸ்மேனாக உலக சாதனை படைத்து உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் அவர் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியிலும் அபாரமாக செயல்படுவார் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.