
தற்போது அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 14ஆவது சீசனின் இரண்டாவது பாதி ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து வீரர் மொயின் அலி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இவர், கடந்த சில மாதங்களாகவே பயோ பபுளில் இருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார். அடுத்து டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர் போன்ற கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் நிலை இருக்கிறது. இதனால், குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியவில்லை. மனஅழுத்தமும் அதிகமாகி வருகிறது என்ற காரணத்தினால்தான், இவர் இந்த அதிரடி முடிவினை எடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பயிற்சியாளர் சில்வர்வுட், கேப்டன் ஜோ ரூட் ஆகியோரிடம் மொயின் அலி முறைப்படி தெரியவிட்டதாகக் கூறப்படுகிறது. மொயின், டெஸ்டிலிருந்து ஓய்வு அறிவித்தாலும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.