Advertisement

வர்ணனையில் மோதிக்கொண்ட மொயின் அலி - அலெஸ்டர் குக்!

ஒரே நாட்டுக்காக விளையாடிய வீரர்கள் இப்படி நேரலை என்றும் கூட பாராமல் காரசாரமாக விவாதித்துக் கொண்டது இங்கிலாந்து ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan June 12, 2022 • 20:12 PM
Moeen, Cook engage in on-air debate over heated argument
Moeen, Cook engage in on-air debate over heated argument (Image Source: Twitter)
Advertisement

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து மண்ணில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்த இங்கிலாந்து 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

அதைத்தொடர்ந்து இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2-வது போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜ் நகரில் ஜூன் 9ஆம் தேதி துவங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் அற்புதமாக பேட்டிங் செய்து 553 ரன்கள் குவித்தது.

Trending


முன்னதாக இந்த போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்று சாதனை படைத்த முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். அந்த நிலைமையில் நேற்றைய 2ஆவது நாளில் அவர் வர்ணனை செய்து கொண்டிருந்தபோது சிறப்பு விருந்தினராக தற்போது விளையாடி வரும் இங்கிலாந்து வீரர் மொயின் அலி இணைந்தார். அப்போது இருவரும் ஒரு கட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. 

அலெஸ்டர் குக் மற்றும் சமீபத்தில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய ஜோ ரூட் ஆகிய இருவர் தலைமையிலும் மொயின் அலி டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அப்படிப்பட்ட நிலையில் கடந்த ஆஷஸ் தொடரின் போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் இங்கிலாந்தின் இதர கேப்டன்களை விட அணியில் உள்ள வீரர்களிடம் விட ஆத்மார்த்தமாக பழகும் ஒரு கேப்டனாக ஜோ ரூட் திகழ்கிறார் என்று ஆஷஸ் தொடரின் போது மொயின் அலி தெரிவித்திருந்தார். 

ஆனால் அதை தனக்கென்று எடுத்துக் கொண்ட குக் “நீங்கள் என்னைதான் குறை கூறுகிறீர்களா? ஆனால் ஜோ ரூட் தலைமையில் நீங்கள் விளையாடிய போது தான் அதிக முறை அணியிலிருந்து நீக்கப்பட்டீர்கள்” என்று பதிலடி கொடுத்தார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த மொயின் அலி “உங்கள் தலைமையில் அறிமுகமான போது 1 – 9 வரை அனைத்து பேட்டிங் இடங்களிலும் களமிறங்கி நிலையில்லாமல் வாய்ப்பு கொடுத்தீர்கள்” என்று குக்கிற்கு பதில் தெரிவித்தார். இந்த சம்பவம் நிகழ்ந்து 4 மாதங்கள் முடிந்த நிலையில் நேற்று அந்த இருவரும் ஒன்றாக வர்ணனை செய்த போதும் அதை மறக்காமல் மீண்டும் அதையே திரும்ப திரும்ப பேசி வம்பிழுத்துக் கொண்டார்கள்.

நேற்றைய போட்டியின் போது வர்ணனையாளர் அறைக்கு மொயின் அலி வந்த பின் அலெஸ்டர் குக் பேசியது பின்வருமாறு. “விடுப்பு நாட்களை முடித்துக் கொண்டு இன்று தான் ஸ்டுடியோவுக்கு வந்தேன். அப்போது மொயின் அலியை பார்த்தபோது அவர் மகிழ்ச்சியுடன் இருந்தார். இருப்பினும் அவர் வர்ணனை செய்த அரை மணி நேரத்தில் “நான் ஒரு சிறந்த கேப்டன் இல்லை என்பதால் என்னால் ஒரு சிறந்த பயிற்சியாளராக இருக்க முடியாது” என்று அவர் அனைவரிடமும் வர்ணனையில் தெரிவித்தார். அப்படி அவர் சொன்னது பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை என்று நான் உணர்கிறேன்” என கூறினார்.

இருப்பினும் தன்னுடைய கருத்துகள் தவறாக எடுத்துக் கொள்ளப் பட்டதாக தெரிவித்த மொயின் அலி அதற்கு மறுப்பு தெரிவித்து பேசியது பின்வருமாறு. “என்னுடைய கருத்துக்கள் வேறு விதத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. உண்மையில் உங்களை விட ஜோ ரூட் அனைத்து வீரர்களிடமும் ஆத்மார்த்தமாக நடந்து கொண்டார் என்றுதான் நான் கூறியிருந்தேன்”

“மேலும் எந்த ஒரு இடத்திலும் நீங்கள் நல்ல கேப்டன் இல்லை அல்லது ரூட்டை விட சுமாரானவர் என்று நான் குறிப்பிடவில்லை. ஆனால் அதை நீங்கள் தனக்கென்று மனதிற்குள் எடுத்துக்கொண்டு விட்டீர்கள். உங்களது கருத்துக்கள் தான் வைரலாகியுள்ளது” என்று பதிலளித்தார். அந்த வர்ணனையின் போது இருவருமே ஒருவருக்கொருவர் அதிருப்தியுடன் காணப்பட்டனர்.

ஒரே நாட்டுக்காக விளையாடிய வீரர்கள் இப்படி நேரலை என்றும் கூட பாராமல் காரசாரமாக விவாதித்துக் கொண்டது இங்கிலாந்து ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement