
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் முதல் போட்டியில் 360 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதை தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது போட்டியிலும் முடிந்தளவுக்கு போராடிய அந்த அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.
மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் 1995-க்குப்பின் 28ஆவது வருடமாக தொடர்ந்து 16ஆவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது அந்நாட்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. முன்னதாக மெல்போர்ன் நகரில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் 317 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு 146/4 என்ற சூழ்நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் முகமது ரிஸ்வான் நிதானமாக விளையாடி வெற்றிக்கு போராடினார்.
இருப்பினும் 35 ரன்களில் இருந்த போது பட் கமின்ஸ் வீசிய பந்தை எதிர்கொண்ட அவர் தவறாக கணித்தார். அப்போது அவருடைய கையில் பந்து உரசிக் கொண்டு செல்வது போல் தெரிந்ததால் ஆஸ்திரேலிய அணியினர் அவுட் கேட்டும் களத்தில் இருந்த அம்பயர் கொடுக்கவில்லை. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத ஆஸ்திரேலிய அணியினர் டிஆர்எஸ் எடுத்தனர்.