
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வளர்ந்து வரும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் ஆஃப்கானிஸ்தான் அணி தற்போது கடந்த 5-6 ஆண்டுகளில் மிகப்பெரிய எழுச்சியை கண்டுள்ளது என்றால் அது மிகையல்ல. ஏனெனில் கத்துக்குட்டி அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட ஆஃப்கானிஸ்தான் அணி சமீப காலங்களாகவே பெரிய அணிகளுக்கு எதிராக முக்கிய போட்டிகளில் வெற்றி பெற்று வருவது அந்த அணியின் எழுச்சியை வெளிக்காட்டும் விதமாக இருக்கிறது.
அந்த வகையில் ஆசிய கோப்பை தொடரில் சோபிக்க தவறிய ஆஃப்கானிஸ்தான் அணி தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் சில பெரிய அணிகளை வீழ்த்தி அதிர்ச்சி அளிக்கும் என்று பலராலும் பேசப்பட்டது. அந்த வகையில் இந்த உலகக்கோப்பை தொடர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 5 போட்டிகளில் பங்கேற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணியானது 2 வெற்றிகளை பெற்று அசதியுள்ளது.
முதல் இரண்டு போட்டிகளில் வங்கதேசம் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே தோல்வியை சந்தித்தாலும் அதன் பிறகு நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாறு காணாத வெற்றியை ருசித்தது. அதற்கடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தாலும் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது.