
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி தொடக்க வீரர் சௌமியா சர்க்கார் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் சாண்டோ 0, மெஹிதி ஹசன் 5, முஷ்ஃபிக்கூர் ரஹிம் 0, தன்ஸித் ஹசன் 25 என விக்கெட்டுகளை இழக்க அந்த அணி 35 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த தாவ்ஹித் ஹிரிடோய் - ஜக்கர் அலி இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து 6ஆவது விக்கெட்டிற்கு 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
அதன்பின் 68 ரன்களில் ஜக்கர் அலி விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இறுதிவரை களத்தில் இருந்த தாவ்ஹித் ஹிரிடோய் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் வங்கதேச அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.