
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் பங்கேற்ற இந்திய அணியானது லீக் சுற்றில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், சூப்பர் 8 மற்றும் அரையியிறுதி சுற்றிலும் அபாரமாக செயல்பட்டு, இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது. இதையடுத்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச அணியானது இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி கம்பேக் கொடுப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்த முகமது ஷமி அதன்பின் நடைபெற்ற எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்காமல் இருந்தார்.