
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் ஒட்டுமொத்த உலகத்தையும் வியந்து பார்க்கும் அளவுக்கு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அந்த போட்டியில் 292 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியா முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து 91/7 என ஆரம்பத்திலேயே சரிந்ததால் கண்டிப்பாக தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அப்போது கேப்டன் பட் கம்மின்ஸ் உதவியுடன் நங்கூரமாக விளையாடிய மேக்ஸ்வெல் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார். இருப்பினும் நீண்ட நேரம் விளையாடியதால் காயத்தை சந்தித்த அவர் அதையும் பொருட்படுத்தாமல் முதலுதவிகளை எடுத்துக்கொண்டு 21 பவுண்டரி 10 சிக்ஸருடன் ஒருநாள் மற்றும் உலகக் கோப்பையில் சேசிங் செய்கையில் இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையுடன் 201 குவித்து வெற்றி பெற வைத்தார்.
அன்றைய நாளில் வெளிப்படுத்திய பேட்டிங்க்கு மேக்ஸ்வெல்க்கு எதிராக யாருமே பந்து வீச முடியாது என்று ரசிகர்கள் வியப்பை வெளிப்படுத்தினர். இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர பவுலர் முகமது ஷமி அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சவாலை ஏற்படுத்தக்கூடிய திறமையை கொண்டிருப்பதாக மேக்ஸ்வெல் பாராட்டியுள்ளார். குறிப்பாக பந்து பிட்ச்சாகி விக்கெட் கீப்பர் கைக்கு செல்லும் வரை சீம் பகுதி நேராக இருக்கும் அளவுக்கு உலகில் மற்ற பவுலர்களை காட்டிலும் துல்லியமாக வீசும் திறமையை கொண்ட ஷமியின் அவுட் ஸ்விங் பந்துகளை எதிர்கொள்வது மிகவும் கடினம் என்று மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.