இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நீண்ட நாள்களாக காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் தொடர்பான மற்றொரு மோசமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி முகமது ஷமி மீண்டும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகவே அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் அவர் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின் படி முழங்கால் காயத்தால் சிரமப்பட்ட முகமது ஷமி, இப்போது பக்க காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம் அணிகளுக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டிக்கான பெங்கால் அணியில் அவர் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தனது உடற்தகுதியை மீட்டெடுக்க முகமது ஷமி தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் பந்துவீச்சு பயிற்சி செய்யும் காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். மேலும் அந்த காணொளியில் ஷமி தனது முழங்காலில் கட்டுடன் பந்து வீசுவதைக் காண முடிந்தது. இந்த காணொளி வெளியான பிறகு, ஷமி விரைவில் களம் திரும்புவார் என்று ரசிகர்கள் நினைத்தனர். அதிலும் வங்கதேச டெஸ்ட் தொடர் அல்லது நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.