
இந்தியாவில் நடைபெற்று ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் முகமது ஷமி. அதேபோல் உலகக்கோப்பை வரலாற்றிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையையும் படைத்தார் . தற்போது உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் முகமது ஷமி, அடுத்து எந்த போட்டியில் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே உலகக்கோப்பை தொடரின் போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முகமது ஷமி ஓய்வில் உள்ளார். உலகக்கோப்பை தொடரின் போதே ஒவ்வொரு நாளும் ஊசி போட்டுக் கொண்டே விளையாடிய அவர், அதன்பின் சிகிச்சை எடுத்து வருகிறார். இதன் காரணமாகவே ஆஸ்திரேலியா டி20 தொடர், தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் உள்ளிட்டவற்றில் தேர்வு செய்யப்படவில்லை.
தற்போது ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரிலும் தேர்வு செய்யப்படவில்லை என்பதால், முகமது ஷமியின் நிலை என்ன என்பது ரசிகர்களிடையே கேள்வியாக இருந்தது. இதனிடையே இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்திய மண்ணில் 2 வேகப்பந்துவீச்சாளர்கள் போதுமென்றாலும், முகமது ஷமி இந்திய அணியின் துருப்புச்சீட்டாக இருப்பார்.