
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் கடந்தாண்டு இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்தார். இதன் காரணமாக அவர் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் தொடர்களில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி தனது காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த முகமது ஷமி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரி 17ஆவது சீசனிலிருந்தும் விலகியதுடன், நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் தடுமாறியுள்ளார்.
இந்நிலையில் தான் தற்சமயம் காயத்திலிருந்து மீண்டுள்ள முகமது ஷமி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுப்பார் என்று தகவல்கள் வெளியாகின. தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள ஷமி உடல் நலம் தேறி வருகிறார். மேலும் அவர் தனது உடற்தகுதியில் ஊக்கமளிக்கும் அறிகுறிகள் இருந்தபோதிலும், அணி நிர்வாகம் எச்சரிக்கையுடன் செயல்படுவதாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்குள் அவர் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிசிசிஐ தொடர்ந்து அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இதனால் அவர் வங்கதேச டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க மாட்டார் என்ற தகவல்கள் வெளி வந்துள்ளனர். மேற்கொண்டு அவர் அக்டோபர் 11ஆம் தேதி நடைபெறும் ரஞ்சி கோப்பையின் முதல் போட்டியில் ஷமி மீண்டும் களமிறங்கவுள்ளார். இதன் மூலம் அவர் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வழி வகுக்கும். மேலும் அவர் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்டில் விளையாடவும் அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.