
சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் இழந்தது. இது இந்திய ரசிகர்களால் இன்னும் மறக்க முடியாத சோகமாக அமைந்தது. ஏனெனில் ஆரம்ப முதலே லீக் சுற்றில் அட்டகாசமாக விளையாடிய இந்தியா தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக சாதனை படைத்து செமி ஃபைனலில் வலுவான நியூசிலாந்தை முதல் முறையாக தோற்கடித்து வரலாற்றை மாற்றி எழுதியது.
மேலும் ரோஹித் முதல் பெஞ்சில் அமர்ந்திருந்து பாண்டியா காயமடைந்ததால் திடீரென வாய்ப்பு பெற்ற ஷமி வரை அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் இந்தியா கண்டிப்பாக வெல்லும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இறுதிப் போட்டியில் பேட்டிங்கில் சுமாராக விளையாடிய இந்தியா வெறும் 240 ரன்கள் மட்டுமே எடுத்து 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் அற்புதமான வாய்ப்பை நழுவ விட்டது.
இந்நிலையில் ஒன்றரை மாதங்கள் அபாரமாக விளையாடி கடைசியில் தோல்வியை சந்தித்ததால் இறுதிப்போட்டி முடிந்த இரவில் இந்திய வீரர்கள் யாருமே சாப்பிட மனமில்லாமல் சோகத்துடன் அமர்ந்திருந்ததாக முகமது ஷமி கூறியுள்ளார். ஆனால் அப்போது திடீரென இந்திய பிரதமர் நரேந்திர மோடி வந்து தங்களுக்கு ஆறுதல் தெரிவித்தது சோகத்திலிருந்து கொஞ்சம் வெளி வருவதற்கு உதவியதாக கூறியுள்ளார்.