
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா தங்களுடைய முதல் 8 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்றுள்ளது. அதனால் அரையிறுதிக்கு முதலில் அணியாக தகுதி பெற்றுள்ள இந்தியா 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் லட்சியப் பயணத்தில் வெற்றி நடை போட்டு எதிரணிகளை மிரட்டி வருகிறது. இந்த வெற்றிகளில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் பேட்டிங் துறையில் ஏற்படுத்தும் தாக்கத்துக்கு நிகராக பந்து வீச்சு துறையில் முகமது ஷமி எதிரணிகளை தெறிக்க விட்டு வருகிறார் என்றே சொல்லலாம்.
குறிப்பாக முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்த அவர் காயமடைந்த பாண்டியாவுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை எடுத்து நியூசிலாந்துக்கு எதிராக ஐசிசி தொடரில் 20 வருடங்கள் கழித்து இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றினார். அதை தொடர்ந்து நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக வெறும் 230 ரன்களை இந்தியா கட்டுப்படுத்தும் போது 4 விக்கெட்களை எடுத்து 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவிய அவர் இலங்கையை வெறும் 55 ரன்கள் சுருட்டி மாஸ் வெற்றி பெறுவதற்கும் 5 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றினார்.
இதனால் ஜாகிர் கான், ஸ்ரீநாத் போன்ற ஜாம்பவான்களை முந்திய அவர் உலகக் கப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்தியராக மாபெரும் சாதனை படைத்தார். அப்படி தரமான வேகம் ஸ்விங் போன்றவற்றால் மிரட்டும் ஷமியை ஜாம்பவான்கள் ஹைடன், வாஷிம் அக்ரம், சோயப் அக்தர் போன்றவர்கள் வெளிப்படையாக பாராட்டினார்கள்.