ஆஸிக்கு எதிராக ஸ்டம்புகளை பறக்க விட்ட முகமது ஷமி; வைரல் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பயிற்சி போட்டி பிரிஸ்பேனின் கப்பா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 57 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 50 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக கேன் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Trending
இதன்பின் 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஸ் 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து கொடுத்தார். இதன்பின் வந்த ஸ்டீவன் ஸ்மித் 11, மேக்ஸ்வெல் 23 என இருவரை தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினாலும், மறுமுனையில் ஆரோன் ஃபிஞ்சின் மிக சிறப்பான ஆட்டத்தின் மூலம் கடைசி இரண்டு ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வரை ஆஸ்திரேலிய அணி வந்தது.
போட்டியின் 19ஆவது ஓவரை வீசிய ஹர்சல் பட்டேல் முதல் பந்தில் 79 ரன்கள் எடுத்திருந்த ஆரோன் பின்ச்சையும், இரண்டாவது பந்தில் டிம் டேவிட்டையும் வெளியேற்றி அசத்தினார். இதோடு வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்ததால், ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
பயிற்சி போட்டி என்பதால், ஆடும் லெவனில் இடம்பெறாத முகமது ஷமியிடம் கேப்டன் ரோஹித் சர்மா கடைசி ஓவரை கொடுத்தார். கடைசி ஓவரின் முதலிரண்டு பந்திலும் தலா 2 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணி, அடுத்த நான்கு பந்தில் நான்கு விக்கெட்டுகளை இழந்தது. அஸ்டன் அகாரை ரன் அவுட் செய்த முகமது ஷமி, மற்ற மூன்று வீரர்களின் விக்கெட்டை கைப்பற்றி இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றியை பெற்று கொடுத்தார்.
முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக இந்த டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு மாற்று வீரராக அணியில் இடம்பிடித்துள்ள முகமது ஷமி தனது முதல் ஓவரிலேயே ஆஸியை மிரட்டிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும் முகமது ஷமி விக்கெட்டுகளை வீழ்த்தும் காணொளியும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now