
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான தொடரை நிர்ணயிக்கும் 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 202 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 100 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ச்வால் 60 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் கேசவ் மகாராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 35 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 25 ரன்களையும் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் அந்த அணி 13.5 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.