
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி 9 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 5 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 5ஆவது இடத்தில் நிறைவு செய்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியுடனான தோல்வி மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தோல்வி உள்ளிட்டவை பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாக மாறியது.
அதுமட்டுமல்லாமல் அந்த அணியின் பந்துவீச்சாளர்களின் மோசமான செயல்பாடே தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது. ஷாகின் அஃப்ரிடி மற்றும் முகமது வாசிம் ஜூனியர் உள்ளிட்டோரை கடந்து ஹாரிஸ் ராவுஃப் மற்றும் ஹசன் அலி உள்ளிட்டோரின் பந்துவீச்சு மோசமாக அமைந்தது. அதிலும் ஹாரிஸ் ராவுஃப் ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தபட்சம் 80 ரன்களை விட்டுக் கொடுத்தது இந்திய ரசிகர்களுக்கே அதிர்ச்சியை கொடுத்தது.
இந்திய ஆடுகளங்களில் எந்த லைன் மற்றும் லெந்தில் வீச வேண்டும் என்பதை பாகிஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் கடைசி வரை புரிந்துகொள்ளவில்லை. இதனால் பாகிஸ்தான் அணி வேகப்பந்துவீச்சாளர்கள் மொத்தமாக 50 விக்கெட்டுகளை தான் வீழ்த்தினார்கள். அதேபோல் பாகிஸ்தான் அணியில் ஸ்பின்னர்கள் கடைசி வரை விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறினர். இதன் காரணமாக துணை கேப்டனான ஷதாப் கானையே சில போட்டிகளில் வெளியில் அமர வைக்க வேண்டிய நிலைக்கு பாகிஸ்தான் அணி தள்ளப்பட்டது.