ஐபிஎல் 2024 தொடரில் அதிக ரன்களை விளாசிய டாப் 5 வீரர்கள் பட்டியல்!
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் அதிக ரன்களை விளாசிய டாப் 5 வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில் நடைபெற்று முடிந்த இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதுடன், மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனைப் படைத்துள்ளது. மேலும் நடப்பு ஐபிஎல் தொடரானது பேட்டர்களுக்கு சிறப்பான தொடராகவே அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல. அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசிய டாப் ஐந்து வீரர்கள் குறித்து இப்பதிவில் விரிவாக காணலாம்.
ஐபிஎல் 2024 அதிக ரன்கள் அடித்த வீரர்கள்
Trending
1. விராட் கோலி
நடப்பு சீசனில் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை வென்றுள்ளார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, அதில் ஒரு சதம், 5 அரைசதங்கள் என 741 ரன்களைக் குவித்து இப்பட்டியலின் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மேலும் இந்த ரன்களை அவர் 61.75 என்ற சராசரியில், 154 ஸ்டிரைக் ரேட்டில் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. ருதுராஜ் கெய்க்வாட்
இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடிப்பவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட். இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய ருதுராஜ், ஒரு சதம், 4 அரைசதங்களை விளாசி அசத்தியுள்ளார். இதன்மூலம் 141 ஸ்டிரைக் ரெட்டில் 583 ரன்களைக் குவித்து அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
3. ரியான் பராக்
இந்த பட்டியலின் மூன்றாம் இடத்தை பிடிப்பவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பராக் தான். கடந்த சில சீசன்களாக சரியாக ரன்களை சேர்க்க முடியாமல் கடும் விமர்சனத்திற்கு உள்ளன ரியான் பராக், நடப்பு ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 அரைசதங்களுடன் 573 ரன்களைச் சேர்த்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளார். அவரின் அதிகபட்ச ஸ்கோர் 84. எனினும், 52.09 என்ற சராசரியுடன்,149.21 என்ற ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
4. டிராவிஸ் ஹெட்
இந்த பட்டியளின் நான்காம் இடத்தைப் பிடிப்பார் நடப்பு ஐபிஎல் சீசனில் அதிவேக சதமடித்த வீரரான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட் தான். நடப்பு ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 15 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 4 அரை சதங்கள் என மொத்தமாக 567 ரன்கள் குவித்துள்ளார். அவரின் சராசரி 40.50, ஸ்ட்ரைக் ரேட் 191.55 ஆகும். தொடர் முழுவதும் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட், பிளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டி என முக்கிய போட்டியில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது.
5. சஞ்சு சாம்சன்
மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் விளையாடி, அதனை பூர்த்தி செய்த வீரர்களில் முக்கிய இடத்தைப் பிடிப்பராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் உள்ளார். நடப்பு சீசனில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியதில் சஞ்சு சாம்சனுக்கு தனி இடம் உள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய அவர் 48.27 என்ற சராசரியில், 153.46 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 531 ரன்களை குவித்து ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளார். இதன்மூலம நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now