
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை ‘கூல் கேப்டன்’ என ரசிகர்கள் அன்போடு அழைப்பது வழக்கம். களத்தில் அவர் அதிகம் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருப்பதே அதற்குக் காரணம். இந்நிலையில், அதற்கான காரணத்தை விவரித்துள்ளார் தோனி.
இதுகுறித்து பேசிய அவர், “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் களத்தில் நாங்கள் எந்தத் தவறும் செய்யக் கூடாது என எண்ணுவோம். அது மிஸ் ஃபீல்ட், கேட்ச் வாய்ப்பை நழுவ விடுவது அல்லது வேறேதேனும் தவறு போன்றவற்றை சொல்லலாம். அப்படியும் வீரர்கள் களத்தில் ஏதேனும் தவறு செய்யும்போது அங்கு கோபப்பட்டு எந்தப் பலனும் இல்லை. மைதானத்தில் 40 ஆயிரம் மக்கள் போட்டியை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
டிவி போன்ற மீடியத்தின் வழியே கோடான கோடி பேரும் பார்த்து வருகின்றனர். நான் எப்போதும் அந்த வீரர் ஏன் தவறு செய்தார். அதற்கான காரணம் என்ன என்பதை அவரது கண்ணோட்டத்தில் நின்று பார்ப்பேன். அந்த வீரர் 100 சதவீதம் அந்த கேட்ச்சை பிடிக்க முயன்று, அதைத் தவறவிட்டிருந்தால் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது.