
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், இத்தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கான மெகா ஏலம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. மேற்கொண்டு இம்முறை கூடுதல் வீரர்களை தக்கவைப்பதற்கான கோரிக்கைகளையும் ஐபிஎல் அணிகள் பிசிசிஐ யுடன் முன்வைத்துள்ளன.
அதேசமயம் எதிர்வரும் ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக வீரர்களின் தேர்வு மற்றும் ரிடெய்ன் விதிமுறைகளில் ஒருசில மாற்றங்களை செய்யும்படியும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் தங்கள் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை தக்கவைப்பதற்காக பழைய விதிமுறையை மீண்டும் கொண்டுவரும் படி பிசிசிஐயிடம் கோரிக்கையை முன்வைத்ததாக தகவல்கள் வெளியாகியானது.
ஐபிஎல் தொடரின் ஆரம்ப காலங்களில், ஏதேனும் ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து குறிப்பிட்ட காலங்களுக்கு பிறகு அந்த வீரரை அன்கேப்ட் வீரராக ஐபிஎல் அணிகள் தேர்வு செய்துகொள்ளலாம் என்ற விதிமுறை இருந்தது. ஆனால் இந்த விதிமுறையானது கடந்த 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக பிசிசிஐயால் கைவிடப்பட்டது. இந்நிலையில் தான் சிஎஸ்கே நிர்வாகம் இந்த விதியை மீண்டும் அமல்படுத்த கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.