
இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த ஏழாவது டி20 உலகக் கோப்பை தொடர் யுஏஇ மற்றும் ஓமானில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெற உள்ளது.
இந்த தொடரில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிசந்திரன் அஸ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்திக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணியில் இடம்பெறவில்லை். அதேசமயம் வாஷிங்டன் சுந்தருக்கும் இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்றது. அதன்பின் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லவில்லை. மகேந்திர சிங் தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டது இந்திய அணிக்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது.