
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. இந்தியாவில் இத்தொடர் நடைபெறவுள்ளதால் இதனைப் பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தலைகுனியும் தோல்விகளை நிறுத்தும் லட்சியத்துடன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா களமிறங்குகிறது.
அதற்கு தயாராகும் வகையில் விரைவில் நடைபெறும் ஆசிய கோப்பையில் விளையாடுவதற்கு 17 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்படும் வீரர்களை வைத்தே உலகக்கோப்பைக்கான இறுதிக்கட்ட 15 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்படும் என்பதால் அந்த தொடரில் இடம் பெறாத வீரர்கள் உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது கடினமாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் உலக கோப்பையில் விளையாடப் போகும் தங்களுடைய 15 பேர் கொண்ட அணிகளை நட்சத்திர முன்னாள் இந்திய வீரர்கள் தேர்வு செய்து வருகின்றனர். குறிப்பாக சௌரவ் கங்குலி, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் போன்றவர்கள் தேர்வு செய்த நிலையில் தற்போது 2019 உலகக்கோப்பை அணியை தேர்வு செய்த முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தனது அணியை வெளியிட்டுள்ளார்.