
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் இந்த மாதம் மார்ச் 31ஆம் தேதி கடைசியில் தொடங்கி, மே மாதம் 28ஆம் தேதி வரையில் நடந்து முடிய இருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு அணிகளும் தங்களது சொந்த மைதானத்தில் விளையாட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐபிஎல் சீசனில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் புதிதாக இணைய, 10 அணிகளைக் கொண்டு மும்பையில் வைத்து, 15ஆவது ஐபிஎல் சீசன் நடத்தப்பட்டது.
இந்த 15ஆவது ஐபிஎல் சீசன் மெகா ஏலத்தோடு அமைந்தது. புதிய அணிகள் மட்டுமல்லாது ஒவ்வொரு அணியிலும் புதிய வீரர்கள் இடம் பெற்று இருந்தார்கள். ஒவ்வொரு அணிக்குள்ளும் வந்த புதிய இளம் வீரர்களில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களான சென்னை அணியின் முகேஷ் சவுத்ரி மற்றும் லக்னோ அணியின் மோசின் கான் இருவரும் மிகவும் கவனம் ஈர்க்கக் கூடியவர்களாக இருந்தனர்.
இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு இவர்களது அடிப்படை தொகையான 20 இலட்சம் ரூபாய்க்கு இரு அணிகளாலும் வாங்கப்பட்டார்கள். சென்னை அணியில் கடந்த ஆண்டு பிரதான பவர்பிளே வேகப்பந்துவீச்சாளர் தீபக் சகர் காயம் காரணமாக விளையாடாததால், இளம் வீரர் முகேஷ் சவுத்ரி 13 போட்டிகளில் விளையாட வாய்ப்பு பெற்று 16 விக்கட்டுகளை கைப்பற்றினார். அதேபோல் லக்னோ அணிக்காக விளையாடிய இடதுகை வேகப் பந்துவீச்சாளர் மோசின் கான் ஒன்பது போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அவரது எக்கனாமி 5.97 மட்டுமே.