
ஐபிஎல் 17 ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெற உள்ள நிலையில் ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மதிப்பு 675 கோடி என கூறப்படுகிறது. இங்கே பிராண்ட் மதிப்பு என்றால் அந்த அணியில் இருக்கும் வீரர்கள், அணியின் சொத்து மதிப்பு ஆகியவற்றை எல்லாம் விடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பெயருக்கு மட்டும் இருக்கும் பண மதிப்பு என்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் சிஎஸ்கே அணிக்கு 675 கோடி பிராண்ட் மதிப்பு உள்ளது.
ஆனால், சிஎஸ்கே அணி இரண்டாவது இடத்திலேயே உள்ளது. ஐபிஎல் அணிகளிலேயே மும்பை இந்தியன்ஸ் அணி அதிக பிராண்ட் மதிப்பு கொண்டுள்ளது. அந்த அணியின் மதிப்பு 725 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 657 கோடியுடன் உள்ளது. நான்காவது இடத்தில் இதுவரை ஐபிஎல் கோப்பையே வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 582 கோடி மதிப்புடன் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் என இரண்டு அணிகளும் அணிகளின் மதிப்பு அதிகமாக இருக்க முக்கிய காரணம் அதிக ஐபிஎல் கோப்பை வென்றது மட்டுமின்றி நீண்ட காலமாக கேப்டன்கள் மற்றும் முக்கிய வீரர்களை மாற்றாமல் இருப்பதும் தான். அந்த வகையில், சிஎஸ்கே அணியில் 2008இல் ஐபிஎல் துவங்கியது முதல் இன்று வரை தோனி கேப்டனாக தொடர்கிறார்.