WPL 2023: குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் இமாலய வெற்றி!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
ஆடவருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போன்று மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் இன்று பிரம்மாண்டமாக தொடங்கியது. மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்காக யஸ்திகா பாட்டியா மற்றும் ஹைலீ மேத்யூஸ் அணியின் ரன் கணக்கை தொடங்கினர். இதில், யஸ்திகா பாட்டியா மும்பை இந் தியன்ஸ் அணிக்கான முதல் ரன்னை எடுத்தார். அவர் 8 பந் துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் தனுஜா கன்வர் பந்தில் வரேஹம்மிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
Trending
இவரைத் தொடர்ந்து நாட் ஸ்கைவர் பிரண்ட் களமிறங்கினார். அவர் 18 பந்துகளில் 5 பவுண்டரி உள்பட 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு புறம் முதல் பவுண்டரியும், முதல் சிக்சரும் விளாசிய ஹீலீ மேத்யூஸ் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் களமிறங்கினார். ஹாட்ரிக் பவுண்டரி விளாசியதுடன் 21 பந்துகளில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார். இதில் 30 பந்துகளை எதிர்கொண்ட அவர், 13 பவுண்டரி விளாசி 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதே போன்று அமீலியா கேர் 24 பந்துகளில் ஒரு சிக்சர் 6 பவுண்டரி உள்பட 45 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இறுதியாக பூஜா வஸ்த்ரேகர் (15), இஸி வோங் (6) ஓரளவு ரன் எடுக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து வரலாற்றில் இடம் பிடித்தது. முதல் சீசனின் முதல் போட்டியில் 200 ரன்களுக்கு மேல் குவித்த அணி என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி படைத்து வரலாற்றில் இடம் பிடித்தது.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் பெத் மூனி 3 பந்துகளை மட்டுமே சந்தித்த நிலையில், காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். இந்த இழப்பிலிருந்து குஜராத் அணி மீழ்வற்குள்ளாகவே மேகனா 2, ஹர்லீன் டியோல் 0, ஆஷ்லே கார்ட்னர் 0, சதர்லேண்ட் 6 என அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின் வந்த ஹேமலதா ஒருமுனையில் நிதானம் காட்டம், மறுமுனையில் களமிறக்கிய ஜார்ஜியா, ஸ்நே ரானா, கன்வர், மான்ஷி ஜோஷி ஆகியோரும் அடுத்தடுத்து மும்பை அணியின் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர்.
பின்னர் ஹேமலதாவுடன் இணைந்த மோனிகா படேலும் ஓரளவு ரன்களைச் சேர்த்தார். இவர்களை இருவரையும் தவிர மற்ற எந்த வீராங்கனையும் இரட்டை இலக்க ரன்களைத் தொடவில்லை. இதனால் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 14.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 64 ரன்களை மட்டுமே எடுத்தது.
மும்பை இந்தியன்ஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய சைகா இஷாக் 4 விக்கெட்டுகளையும், நாட் ஸ்கைவர், அமிலியா கெர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றதுடன், தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now