
உள்நாட்டு முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு அரையிறுதி போட்டியில் மத்திய பிரதேசம் - பெங்கால் அணிகளும், மற்றொரு அரையிறுதியில் மும்பை - உத்தர பிரதேச அணிகளும் மோதின.
மத்திய பிரதேசம் - பெங்கால் அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 341 ரன்கள் அடித்தது. பெங்கால் அணியில் மனோஜ் திவாரி மற்றும் ஷபாஸ் அகமது ஆகிய இருவரும் சதமடித்துமே அந்த அணி 273 ரன்கள் மட்டுமே அடித்தது.
அதன்பின் 68 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய மத்திய பிரதேச அணி 2ஆவது இன்னிங்ஸில் 281 ரன்கள் அடித்தது. மொத்தமாக 349 ரன்கள் முன்னிலை பெற்றது மத்திய பிரதேச அணி. 350 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பெங்கால் அணி 2ஆவது இன்னிங்ஸில் 175 ரன்கள் மட்டுமே அடித்து 174 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மத்திய பிரதேச அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.