
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் ஷகீல் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 446 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்து இன்னிங்ஸை முடித்தது.
இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது ரிஸ்வன் 171 ரன்களையும், பாகிஸ்தான் அணியின் துணைக்கேப்டன் சௌத் ஷகீல் 141 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் ஷொரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியில் சாத்மன் இஸ்லாம் 93 ரன்களையும், மொமினுல் ஹக் 50 ரன்களையும், அதிரடியாக விளையாடிய லிட்டன் தாஸ் 56 ரன்களையும் என சேர்த்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.
அதேசமயம் வங்கதேச அணியில் 5ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய முஷ்ஃபிக்கூர் ரஹீம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதுடன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 11ஆவது சதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் வங்கதேச அணியானது முதல் இன்னிங்ஸில் முன்னிலையை நோக்கி விளையாடி வருகிரது. இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய வங்கதேச வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். அந்தவகையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் 15000 ரன்களை எட்டியுள்ளார்.