1st Test: பிளெஸிங் முசரபானி ஆபாரம்; வங்கதேசத்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.

வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியைப் பொறுத்தமட்டில் மொமினுல் ஹக் 56 ரன்களையும், கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 40 ரன்களையும், ஜக்கர் அலி 28 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிளெசிங் முசரபானி மற்றும் வெலிங்டன் மஸகட்சா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
Also Read
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணியில் பிரையன் பென்னட் 57 ரன்களையும், சீன் வில்லியம்ஸ் 59 ரன்களையும், நியாஷா மயாவோ 35 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கத் தவறினர். இதனால் ஜிம்பாப்வே அணியானதுமுதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்த கையோடு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளையும், நஹித் ரானா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் 82 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் ஷாத்மான் இஸ்லாம் 4 ரன்னில் நடையைக் கட்டினார். அதன்பின் மஹ்முதுல் ஹசன் ஜாய் 33 ரன்களிலும், அரைசதத்தை நெருங்கிய மொமினுல் ஹக் 47 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய முஃபிக்கூர் ரஹிமும் 4 ரனக்ளுடன் நடையைக் கட்டினார். பின்ன்ர் இணைந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ - ஜக்கார் அலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இருவரும் தங்களுடைய அரைசதங்களை பதிவுசெய்ததுடன் அணியை முன்னிலைப் படுத்தனர். பின்னர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 60 ரன்களுக்கும், ஜக்கர் அலி 58 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, மற்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிளெஸிங் முஸரபானி 6 விக்கெட்டுகளையும், வெலிங்டன் மஸகட்சா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இதையடுத்து 174 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் மற்றும் பென் கரண் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்க முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் பிரையன் பென்னட் அரைசதம் கடந்தும அசத்தினார். இதன்மூலம் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய பென் கரண் 7 பவுண்டரிகளுடன் 44 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய நிக் வெல்ச் 10 ரன்னிலும், சீன் வில்லியம்ஸ் 9 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அரைசதம் கடந்து விளையாடி வந்த பிரையன் பென்னட்டும் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 54 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். பின்னர் அணியின் கேப்டன் 10 ரன்னிலும், மயவோ ஒரு ரன்னிலும், வெலிங்டன் மஸகட்ஸா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டி ஏமாற்றமளித்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வெஸ்லி மதவெரே 19 ரன்களையும், ரிச்சர்ட் ங்காரவா பவுண்டரி அடித்தும் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.
Also Read: LIVE Cricket Score
இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. மேலும் இந்த போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த பிளெஸிங் முஸரபானி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Win Big, Make Your Cricket Tales Now