
இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர்களில் ஒருவராக அறியப்படுபவர் சஞ்சு சாம்சன். இந்திய அணிக்காக கடந்த 2015ஆம் ஆண்டே அறிமுகமானாலும், தொடர்ச்சியான வாய்ப்பு கிடைக்காத தால் ஒவ்வொரு முறையும் தனது வாய்பிற்காக காத்திருந்தார். இந்நிலையில் சமீப காலமாக ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், இந்திய அணியிலும் இடம்பிடிக்க ஆரம்பித்தார்.
மேற்கொண்டு கடந்தாண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது தனது முதல் சர்வதேச சதத்தைப் பதிவுசெய்து அசத்திய சஞ்சு சாம்சன், ஐபிஎல் தொடரிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்தார். ஆனால் அத்தொடரிலும் சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் தான் ஹைதராபாத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தனது முதல் டி20 சதத்தை அடித்த சஞ்சு சாம்சன் மீண்டும் ரசிகர்களின் விருப்பமாக மாறியுள்ளார். இதனால் இனிவ்ரும் தொடர்களில் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விரும்புவதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளது கவனம் ஈர்க்கிறது.