
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு டையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று பல்லகலேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானத்ஹு 38.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதன் காரணமாக இப்போட்டி தடைபட்டது.
இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரூதர்ஃபோர்டு பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்ததுடன் 74 ரன்களையும், கேசி கார்டி 37 ரன்களையும், ரோஸ்டன் சேஸ் 33 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் வநிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின்னரும் மழை நீடித்த காரணத்தால் இலங்கை அணிக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 37 ஓவர்களில் 232 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியில் தொடக்க வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 5 ரன்னில் பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் 13 ரன்னிலும், சதீரா சமரவிக்ரமா 18 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் நிஷான் மதுஷ்காவுடன் இணைந்த கெப்டன் சரித் அசலங்கா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.