
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி தாக்காவில் இன்று தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பந்துவீசுவதாக தீர்மானித்து வங்கதேசத்தை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் ஸகிர் ஹசன் ஒரு ரன்னை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த மஹ்முதுல் ஹசன் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கொரை உயர்த்தியதுடன், இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
பின் 76 ரன்களில் மஹ்முதுல் ஹசன் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய மொமினுல் ஹக்கும் 15 ரன்களுக்கு நடையைக் கட்டினார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நஜ்முல் ஹொசைன் சாண்டோ சதமடித்து அசத்தியதோடு 146 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.