தென் ஆப்பிரிக்க அணியானது தற்போது அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியானது பேட்டிங் செய்வதாக அறிவித்து விளையாடி வருகிறது. இதனைத்தொடர்ந்து வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தென் ஆப்பிரிக்க அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
அதன்படி வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 21ஆம் தேதி தாக்காவிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 29ஆம் தேதி சட்டோகிராமிலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வங்கதேச டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்துள்ளது. அதன்படி 15 பேர் அடங்கிய இந்த தென் ஆப்பிரிக்க அணியை டெம்பா பவுமா வழிநடத்தவுள்ளார். அதேசமயம் இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் அறிமுக வீரரான மேத்யூ பிரிட்ஸ்கீக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.