பென் டக்கெட்டின் கருத்துக்கு பதிலடி கொடுத்த நாசர் ஹுசைன்!
இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடியான ஆட்டம் குறித்து இங்கிலாந்து வீரர் பென் டக்கேட்டின் கருத்துக்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 2-1 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்று அசத்தியுள்ளது.
இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது இரட்டை சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அதிலும் குறிப்பாக அந்த இன்னிங்ஸிஸ் அவர் 14 பவுண்டரி, 12 சிக்சகளை விளாசி சாதனைகளை குவித்ததுடன், இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர்களுடைய பாஸ்பால் யுக்தியை காட்டினார்.
Trending
இந்நிலையில், இப்போட்டியின் போது யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடியான ஆட்டத்தை இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் பாராட்டியிருந்தார். அதிலும் குறிப்பாக, யஷஸ்வி ஜெய்ஸ்வால் இவ்வாறு விளையாடுவதைப் பார்க்கும்போது, அவர் எங்களுடைய பாஸ்பால் அனுகுமுறையைப் பார்த்து தான் இப்படி அடிரடியாக விளையாடுகிறார் என்பது போல் கூறியிருந்தார். இதையடுத்து பென் டக்கேட்டின் கருத்துக்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய நாசர் ஹுசைன், “ஜெய்ஸ்வால் ஒன்றும் உங்களிடம் இருந்து விளையாட கற்றுக்கொள்ளவில்லை. அவர் தான் வளர்ந்த விதத்திலிருந்து இப்படி விளையாட கற்றுக்கொண்டார். வளரும் போது கடினமாக முயற்சித்த அவர் ஐபிஎல் தொடரிலிருந்து கற்றுக் கொண்டார். எனவே ஏதாவது இருந்தால் நான் அவரை பார்த்து அவரிடமிருந்து கற்றுக் கொள்வேன்.
சில சமயங்களில் பாஸ்பால் குறித்து வெளிப்படையாக விமர்சிக்க முடியாது, இருந்தும் இந்த சூழ்நிலையிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்டு முன்னேறலாம். இதுகுறித்து இங்கிலாந்து அணியினர் தங்களது ஓய்வறையில் சுய பரிசோதனை செய்வார்கள் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாசர் ஹுசைனின் இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now