
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ம்ற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ், ஜார்ஜியா வெர்ஹாம் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழபிற்கு 199 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 53 ரன்களையும், எல்லிஸ் பேர்ரி 49 ரன்களையும், ரிச்சா கோஷ் 36 ரன்களையும், ஜார்ஜியா வெர்ஹாம் 31 ரன்களையும் சேர்த்தனர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் நாட் ஸ்கைவர் பிரண்ட் 69 ரன்களையும், சஜீவன் சாஜனா 23 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் ஆர்சிபி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.