
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இன்டர்நேஷ்னல் லீக் என்றழைக்கப்படும் ஐஎல்டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் - ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ்வென்ற கல்ஃப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 6 ரன்களிலும், டேவிட் மாலன் 5 ரன்களிலும், கேப்டன் மொயீன் அலி 16 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த கொஹ்லர் - ஜோ டென்லி ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் கொஹ்லர் 36 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த ஜோ டென்லி அரைசதம் கடந்த கையோடு 58 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த முகமது நபி தனது பங்கிற்கு 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களைச் சேர்த்தது.