
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பு கங்குலி கையில் இருந்து மாறி ராகுல் டிராவிட் கைகளுக்கு வந்த பொழுது, அணிக்குள் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டு இருந்தன. இந்திய அணியின் மிக வெற்றிகரமான கேப்டனாக அறியப்படுகிற மகேந்திர சிங் தோனி, கங்குலி கேப்டன் பொறுப்பில் இருந்த பொழுது அணிக்குள் அறிமுகமாகி, தான் கேப்டன் ஆவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பு வரை ராகுல் டிராவிட் கேப்டன் பொறுப்பில் கீழ் விளையாடினார்.
இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய மோசமான நேரமான 2007 ஆம் ஆண்டு சச்சின் அறிவுறுத்தல் படி அப்போது நடந்த முதல் டி20 உலகக்கோப்பைக்கு கேப்டனாக மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட, அவர் தலைமையிலான அணி அந்த உலகக் கோப்பையை வெல்ல, அங்கிருந்து இந்திய கிரிக்கெட் எல்லாம் மாற ஆரம்பித்தது.
மகேந்திர சிங் தோனி மிக நெருக்கடியான அழுத்தம் மிகுந்த நேரங்களில் மிகவும் பொறுமையாக இருந்து அந்த சூழ்நிலைக்கு தேவையான முடிவுகளை எடுத்து பலமுறை கிரிக்கெட் ரசிகர்களையும் வீரர்களையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அவர் அணியை வழிநடத்தும் விதம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்களை தாண்டி உலக அளவில் மிகவும் பலரைக் கவர்ந்த ஒன்றாக இப்பொழுதும் இருக்கிறது. அவரது இந்த வழிநடத்துதல் குணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்த ஆண்டு கூட ஐபிஎல் பட்டத்தை வெல்ல வைத்தது.