
தென் ஆப்பிரிக்க அணி தற்போது இந்திய அணிக்கெதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் செஞ்சூசியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் ஜனவரி 03ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றனர்.
இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 04ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் தென் ஆப்பிரிக்காவின் உள்ளூர் டி20 தொடரான எஸ்ஏ20 லீக் தொடரில் விளையாடவுள்ளதால், நியூசிலாந்து தொடருக்கு இளம் வீரர்களைக் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள நீல் பிராண்ட் இந்த அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளது தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அணியை வழிநடத்தும் இரண்டாவது கிரிக்கெட் வீரர் எனும் பெருமையையும் நீல பிராண்ட் பெறவுள்ளார்.