ஒருநாள் கிரிக்கெட்டில் 370 என்ற இலக்கை அசால்ட்டாக எட்டி சாதனை படைத்த நெதர்லாந்து!
ஸ்காட்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.

ICC Cricket World Cup League Two 2023-27: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 370 என்ற இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது.
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2027 தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 79ஆவது லீக் போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணியில் ஜார்ஜ் முன்ஸி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தியதுடன் 14 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களுடன் 191 ரன்களில் ஆட்டமிழந்து 9 ரன்களில் இரட்டை சதத்தை தவறவிட்டர்.
மேற்கொண்டு அந்த அணியின் கேப்டன் மேத்யூ கிராஸ் 59 ரன்களைச் சேர்த்ததன் மூலம் ஸ்காட்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 369 ரன்களைச் சேர்த்தது. நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் தத் மற்றும் மைக்கெல் லெவிட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையடைய நெதர்லாந்து அணிக்கு மேக்ஸ் ஓடவுட் மற்றும் மைக்கேல் லெவிட் இணை அதிரடியன தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் மைக்கேல் லெவிட் 44 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் தேஜா நிடமனுரு 51 ரன்களையும், நோவா குரோஸ் 50 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்த நிலையில் இறுதிவரை களத்தில் இருந்த மேக்ஸ் ஓடவுட் சதமடித்து அசத்தியதுடன், 12 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 158 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் நெதர்லாந்து அணி 49.2 ஓவர்களில் இலககை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Also Read: LIVE Cricket Score
இந்நிலையில் இப்போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றிபெற்றதன் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளது. அதன்படி அந்த அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 300+ ரன்களைச் சேஸிங் செய்து சாதனைப் படைத்துள்ளது. அதேசமயம் இப்போட்டியில் 370 என்ற இலக்கை எட்டியதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச இலக்கை சேஸிங் செய்த மூன்றாவது அணி எனும் சாதனையையும் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now