
நெதர்லாந்தில் அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற டி20 போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய அந்த அணிக்கு கேப்டன் மொனாங்க் படேல் - அறிமுக வீரர் சைதேஜா முக்கமல்ல இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
பின்னர் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மொனாங்க் படேல் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த அறிமுக வீரர் சைதேஜா முக்கமல்ல அரைசதம் கடந்து அசத்தியதுடன், 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 52 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து 21 ரன்களில் ஆண்ட்ரிஸ் கௌஸும், 5 ரன்களில் ஆரோன் ஜோன்ஸும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்மீத் சிங் - நிதீஷ் குமார் இணை ஓரளவு தக்குப்பிடித்ததுடன், அணியின் ஸ்கோஒரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
பின்னர் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்மீத் சிங் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து நிதீஷ் குமாரும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஷயான் ஜஹாங்கீர் 15 ரன்களும், வான் சால்விக் 15 ரன்களையும் சேர்க்க அமெரிக்க அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்ததுடன் 168 ரன்களைச் சேர்த்தது. கனடா அணி தரப்பில் சாத் பின் ஸஃபர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கனடா அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அதன்படி அந்த அணியின் ஆரோன் ஜான்சன், கன்வர்பால் தத்குர், நிக்கோலஸ் கிர்டன் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.