
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1 – 1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. அந்த வகையில் விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமலேயே சூர்யகுமார் யாதவ் தலைமையில் வலுவான தென் ஆப்பிரிக்காவிடம் அடங்க மறுத்த இளம் இந்திய அணி கோப்பையை பகிர்ந்து கொண்டு தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்துள்ளது.
முன்னதாக ஜோஹன்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற 3ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் சூர்யகுமார் யாதவ் 100, ஜெய்ஸ்வால் 60 ரன்கள் எடுத்த உதவியுடன் 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை சேசிங் செய்த தென் ஆப்பிரிக்கா சுமாராக விளையாடி 95 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது.
அதனால் 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்களை சாய்த்தார். இருப்பினும் பேட்டிங்கில் 7 பவுண்டரி 8 சிக்ஸருடன் 100 ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.