
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியனது இன்று தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் ராபின்சன் - வில் யங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிம் ராபின்சன் 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மார்க் சாப்மேனும் ஒரு ரன்னில் நடையைக் கட்டினார். பின்னர் வில் யங்குடன் இணைந்த கிளென் பிலீப்ஸ் ஓரளவு தாக்குப்பிடித்து விக்கெட் இழப்பை தடுக்க முயற்சித்தார். பின்னர் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 19 ரன்களை எடுத்த நிலையில் வில் யங் ஆட்டமிழக்க, 13 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு கிளென் பிலீப்ஸும் தனது விக்கெட்டை இழந்தார்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மைக்கேல் பிரேஸ்வெல் நிதானமாக விளையாடிய நிலையில், மறுபக்கம் களமிறங்கிய மிட்செல் ஹெய் ரன்கள் ஏதுமின்றியும், ஜோஷ் கிளார்க்சன் 3 ரன்களிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மைக்கேல் பிரேஸ்வெல் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 27 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த கேப்டன் மிட்செல் சான்ட்னரும் 16 ரன்களில் நடையைக் கட்டினார். இதனால் நியூசிலாந்து 96 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்தது.