
நியூசிலாந்து அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியதுடன், தொடரையும் வென்றது.
இதனையடுத்து நியூசிலாந்து அணி தற்சமயம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையிலும், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் புனேவில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இத்தொடருக்கு பிறகு நியூசிலாந்து அணியானது மீண்டும் இலங்கையில் சுற்றுப்பாயணம் செய்து கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி நியூசிலாந்து அணி எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது நவம்பர் 09ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.