முத்தரப்பு டி20 தொடர்: கான்வே, ஹென்றி அசத்தல்; ஜிம்பாப்வேவை வீழ்த்தியது நியூசிலாந்து!
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

ZIM vs NZ, T20I: ஜிம்பாவேவுக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் 59 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு வெஸ்லி மதவெரே மற்றும் பிரையன் பென்னட் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து 37 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் பிரையன் பென்னட் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கிளைவ் மடாண்டே, சிக்கந்தர் ரஸா, ரியான் பார்ல் உள்ளிட்டோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதற்கிடையில் அணியின் மற்றொரு தொடக்க வீரரான வெஸ்லி மதவெரேவும் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளை இழந்ததுடன் 120 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும், ஆடம் மில்னே, மிட்செல் சான்ட்னர், மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு டிம் செஃபெர்ட் - டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிம் செஃபெர்ட் 3 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் கான்வேவுடன் இணைந்த ரச்சின் ரவீந்திரா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார். இதில் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், 30 ரன்களை எடுத்திருந்த ரச்சின் ரவீந்திரா தனது விக்கெட்டை இழந்தார்.
Also Read: LIVE Cricket Score
இருப்பினும் இப்போட்டியில் அரைசதம் கடந்த டெவான் கான்வே இறுதிவரை ஆட்டமிழக்காமல் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 59 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய டேரில் மிட்செல் 26 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 13.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நீயூசிலாந்து அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இப்போட்டியில் அரைசதம் கடந்த டெவான் கான்வே ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Win Big, Make Your Cricket Tales Now