
நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் விளையாடிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் மற்றும் அகா சல்மான் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி சதமடித்தனர். பாபர் அசாம் 161 ரன்களையும், தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்த அகா சல்மான் 103 ரன்களையும் குவித்தனர். சர்ஃபராஸ் அகமது 86 ரன்கள் அடிக்க, முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 438 ரன்களை குவித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டெவான் கான்வே மற்றும் டாம் லேதம் ஆகிய இருவரும் இணைந்து மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 183 ரன்களை குவித்தனர். கான்வே 92 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். சதமடித்த டாம் லேதம் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அபாரமாக பேட்டிங் ஆடிய கேன் வில்லியம்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 5வது இரட்டை சதத்தை விளாசினார். வில்லியம்சன் 200 ரன்களை குவிக்க, இஷ் சோதி 65 ரன்கள் அடித்தார். முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 612 ரன்களை குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது நியூசிலாந்து அணி.