-mdl.jpg)
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி போட்டிகள் இன்று தொடங்கியது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த பாகிஸ்தான் அணிக்கும் இமாம் உல் ஹக் - அப்துல்லா ஷஃபிக் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் இமாம் உல் ஹக் ஒரு ரன்னிலும், அப்துல்லா ஷஃபிக் 14 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் ஆசாம் இருவரும் தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர்.
அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த பாபர் ஆசாம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 80 ரன்களில் ஆட்டமிழந்து சமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேசமயம் மறுபக்கம் அபாரமாக விளையாடிய முகமது ரிஸ்வான் 93 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் என சதத்தைப் பதிவுசெய்த கையோடு 103 ரன்களில் ரிட்டையர்ட் ஹைர்ட் முறையில் வெளியேறினார். அதிலும் இந்திய மண்ணில் ரிஸ்வான் விளையாடிய முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தியுள்ளார்.