
நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளைடாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனையாடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புலவாயோவில் உள்ள குயின்ஸ் போட்ர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் - பிராண்டான் டெய்லர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பென்னட் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, அடுத்து வந்த நிக் வெல்ச் 11 ரன்னிலும், சீன் வில்லியம்ஸ் 11 ரன்னிலும், கேப்டன் கிரேய்க் எர்வின், சிக்கந்தர் ரஸா உள்ளிட்டோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.
அதேசமயம் 4 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்த பிராண்டன் டெய்லர் 44 ரன்களில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் தஃபத்ஸ்வா சிகா 33 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் அந்த அணி 125 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், ஸகாரி ஃபால்க்ஸ் 4 விக்கெட்டுகளையும், மேத்யூ ஃபிஷர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.