PAK vs NZ: பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து; ஐபிஎல் அணிகளுக்கு பின்னடைவு!
நியூசிலாந்து அணி வரும் ஏப்ரல் மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடருக்கான போட்டி அட்டவணை மற்றும் குழுக்களை ஐசிசி சமீபத்தில் அறிவித்தது. அதன்படி இத்தொடரானது ஜூன் 01ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது.
இத்தொடருக்கான அனைத்து அணிகளும் மற்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடி உலகக்கோப்பை தொடருக்காக தங்களைத் தயார்ப்படுத்தி வருகிறது. அந்தவகையில், நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகாள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டி20 தொடரானது வரும் ஏப்ரல் 18ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Trending
மேலும் ஏப்ரல் 14ஆம் தேதி பாகிஸ்தான் செல்லும் நியூசிலாந்து அணியானது இரண்டுநாள் பயிற்சிக்கு பிறகு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் நியூசிலாந்து அணியைச் சேர்ந்த கேன் வில்லியம்சன், டிரெண்ட் போல்ட், லோக்கி ஃபார்குசன், மிட்செல் சாண்ட்னர், டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திர போன்ற நட்சத்திர வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
ஆனால் ஏப்ரல் மாதத்தில் நியூசிலாந்து அணி வீரர்கள் டி20 தொடரில் பங்கேற்பதாக பாகிஸ்தான் செல்லும் நிலையில், பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவார்கள். அதிலும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகளில் நியூசிலாந்தின் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் அவர் தொடரிலிருந்து விலகினால் அது அந்த அணிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் - நியூசிலாந்து தொடர் அட்டவணை
- ஏப்ரல் 18 - முதல் டி20, ராவல்பிண்டி
- ஏப்ரல் 20- 2ஆவது டி20, ராவல்பிண்டி
- ஏப்ரல் 21- 3ஆவது டி20, ராவல்பிண்டி
- ஏப்ரல் 25 - 4ஆவது டி20, லாகூர்
- ஏப்ரல் 27 - 5ஆவது டி20, லாகூர்
Win Big, Make Your Cricket Tales Now