
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் நியூசிலாந்து மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் நேற்று பலப்பரிட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வுசெய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த அந்த அணியில் பெர்னடைன் - சூஸி பேட்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் பெர்னடைன் 32 ரன்களில் ஆட்டமிழக்கா, மறுமுனையிலிருந்து சூஸி பேட்ஸ் 56 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்த அமிலியா கெர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன், அரைசதம் கடந்தும் அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக அமிலியா கெர் 66 ரன்கள் விளாசினார்.