1-lg1-mdl.jpg)
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இப்போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இருந்தும் அந்த அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக இலங்கை தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இதன் காரணமாக முதல் டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் வில் யங் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலாவது கேன் வில்லியம்சன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதிலிருந்து அவர் விலகியுள்ளது அணிக்கு பின்னடவைவாகவே பார்க்கப்படுகிறது.