
இலங்கை மகளிர் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் போட்டியானது நேற்று நடைபெற்றது. கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அன்னேரி டெர்க்சன் சதமடித்ததுடன் 104 ரன்களையும், சோலே ட்ரையான் 74 ரன்களையும் சேர்த்து அசத்தினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தேவாமி விஹங்கா 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியில் கேப்டன் சமாரி அத்தபத்து 52 ரன்களையும், அனுஷ்கா சஞ்சீவனி 43 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறியதால், இலங்கை மகளிர் அணி 42.5 ஓவர்களில் 239 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க தரப்பில் சோலே ட்ரையான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.