
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்தியா அணியானது தங்கள் அணிக்குள்ளேயே இரு அணிகளாக பிரிந்து பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் எதிர்வரும் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இத்தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் அறிமுக வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிதீஷ் குமார் ரெட்டி, பெர்த் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடைபெற்ற பயிற்சி போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வெளியான தகவலின் படி, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் போட்டியில் இந்திய அணியின் விளையாடும் பதினொன்றில் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக நிதிஷ் குமார் ரெட்டி விளையாடுவார் என்றும், இந்த சுற்றுப்பயணத்தில் ஷர்துல் தாக்கூர், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் இந்திய அணியில் இல்லாத காரணத்தால், அணியின் வேகப்பந்து வீச்சாளராக நிதீஷ் ரெட்டி சேர்க்கப்படுவார் என்று கூறப்படுகிறது.